விருதுநகர் அக், 4
சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நீ்க்கம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன் கடந்த 2019-ல் அருப்புக்கோட்டை தாலுகாவில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றினார். மே 2019அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் அதற்கு முன்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை பல்வேறு சங்கங்கள் எதிர்த்தனர். சுப்பிரமணியம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, அவரது தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் சுப்பிரமணியனுக்கு தற்போது பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய கோரி சிவகாசி யூனியன் அலுவலகம் முன்பு ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலர்கள் மக்கள்நலப்பணியாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.