காஞ்சிபுரம் நவ, 19
உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த ருத்ரா என்ற ருத்ரகுமார், அண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அண்ணாத்தூர் மணி மற்றும் எடமச்சி பகுதியை சேர்ந்த தமிழ்மணி திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பதும் தெரிய வந்தது. காவல்துறையினர் விசாரணையில் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த உத்திரமேரூர் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.