ஈரோடு நவ, 15
பவானியை அடுத்த சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை ஒரு சரக்கு ஆட்டோ முந்திச்செல்ல முயன்றது. அப்போது சரக்கு ஆட்டோ காரின் பின்பக்கத்தில் எதிர்பாராத வகையில் மோதியது. இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், சித்தோடு போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். அவர்கள் வருவதற்குள் சரக்கு ஆட்டோவில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டார்கள்.
இதனால் காவல் துறையினர் சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது உள்ளே தமிழக அரசால் தடைெசய்யப்பட்ட 20 கிராம் மதிப்பிலான பான் மசாலா பொருட்கள் 14,100 பாக்கெட்டுகளும், 3 கிராம் மதிப்பிலான குட்கா 24,420 பாக்கெட்டுகளும், 9 கிராம் மதிப்பிலான 4,992 பாக்கெட்டுகளும் என மொத்தம் சுமார் 399 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.