ஈரோடு நவ, 13
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. நேற்று மாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 4,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர், வருவாய் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.