கன்னியாகுமரி அக், 22
குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோயாளிகள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது. எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.