புதுக்கோட்டை அக், 21
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 97 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரதிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நடராஜன் மகன் அருள் (வயது 36), கனகராஜ் மகன் அய்யப்பன் (30), சோனையன் மகன் சுந்தரம் (26) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.