நீலகிரி அக், 20
கூடலூர், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சரவண கண்ணன், வட்டாச்சியர் சித்தராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.