திருவனந்தபுரம் அக், 18
கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா.
இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார். மேலும் நரபலி கொடுத்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய பகவல் சிங்கும், அவரது மனைவி லைலாவும் இலத்தூர் வீட்டில் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து ஷபியே நரபலி கொடுக்க பெண்களை கடத்தி வந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகியோரை இலத்தூருக்கு கடத்தி சென்றார். பகவல் சிங் வீட்டில் அவர்கள் இருவரையும் வைத்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஷபி, பகவல் சிங், லைலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது அவர்கள் நரமாமிசம் சாப்பிட்டதை 3 பேருமே ஒப்புக்கொண்டுள்ளனர். இது காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. மேலும் 3 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.