புதுச்சேரி அக், 19
முதலமைச்சர் ரங்கசாமியிடம் மீனவர்கள் இன்று சந்தித்து கொடுத்த மனுவில், கடலூர் முதுநகரில் அமைந்துள்ள துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதால் தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டது. இதைத் தடுக்க அந்த ஊர்களில தமிழக அரசினால் கருங்கல் சுவர் எழுப்பி வருகின்றனர்.
இதனால் மூர்த்திக்குப்பம்-புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு, நல்லவாடு, பூரணாங்குப்பம்-புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம் மற்றும் பெரிய வீராம்பட்டினம் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே கடற்கரை கிராமங்களை பாதுகாக்க மேற்கு-கிழக்காக கருங்கற்களை கொட்டவேண்டும். கருங்கல் சுவர் கடலினுள் சுமார் 70 மீட்டர் முதல் 80 மீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு ஊர்களிலும் சமமான இடைவெளியில் 2 முதல் 4 கருங்கற்கள் சுவர் அமைத்து மீன்பிடி தொழில் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும். ஏனெனில் புதுவை அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளில் மிக முக்கியமானவை மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளாகும். எனவே கடற்கரையின் அழகை காப்பது மிகவும் அவசியமாகும். எனவே கடல் அரிப்பை தடுத்து மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், கடற்கரைகளை பாதுகாக்கவும் வருகிற பருவமழை தீவிரத்தை கணக்கில்கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.