சிவகங்கை அக், 18
இளையான்குடி பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு எல்லாம் தென்னந்தோப்புகளில் வரப்பு ஓரத்திலும், மானாவாரி நிலத்திலும் பனை மரங்கள் அதிகமாக காணப்பட்டன. கிராமங்களில் உள்ள பனை மரம் ஏறும் தொழிலாளர் சிலர், பெண் பனை மரத்தில் சீசன் காலத்தில் நுங்கு அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். ஆண் பனை மரங்களில் பதநீர் வடித்து, கருப்பட்டி உற்பத்தி செய்கின்றனர். ஆனால் பனை மரங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சமீப காலங்களில் பனை மரங்களை வியாபாரிகள் கிராம மக்களின் பண தேவைகளை அறிந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெட்டி அழிந்துவிட்டனர். இதனால் பனை சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். பனை மரங்கள் இருந்த பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் பனை மரங்கள் குறைந்து வருகின்றன. தமிழக அரசு பனை மர தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பனை விதைகளை கிராமங்களில் வளர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனை சார்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.