ஈரோடு அக், 17
ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது.இந்த தேர்வானது ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி. ஹாலில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இருபாலர்கள், பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படித்திருக்க வேண்டும். அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் படித்தவர்கள் பங்கேற்கலாம்.
மேலும் எழுத்து தேர்வு, மருத்துவம் சார்ந்த மற்றும் மனித வள துறையின் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இதேபோல், ஓட்டுனர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலர்களுக்கும் வாய்ப்பு உண்டு. கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களையும், முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்.