ஈரோடு அக், 13
இந்திய அரசு மக்கள் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை அச்சிட்டு வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. இந்த பணத்தை நாடு முழுவதும் தங்கள் தேவையின் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒற்றை ரூபாய் பணமாக இருந்தால் கூட வீதியில் கிடந்தால் யாரும் குனிந்து எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வார்கள்
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் அதாவது ரூ.10 நாணயத்தை வீதியில் கொட்டி போட்டாலும் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நிலைதான் இருக்கிறது. ரூ.10 நாணயம் வெளிவந்த சில நாட்களிலேயே ஈரோடு மாவட்டத்தில் இந்த நாணயங்கள் செல்லாது என்று ஒரு புரளி கிளம்பியது. குறிப்பாக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் டிக்கெட் வாங்கும்போது அது செல்லாது என்று நடத்தினர்கள் கூறியதாகவே தொடக்கத்தில் இந்த புரளி கிளம்பியது.
அது மெல்ல மெல்ல பூதாகரமாகி டீக்கடை, மளிகைக்கடை, வங்கி என்று வளர்ச்சி அடைந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இல்லை என்கிற அளவுக்கு ஈரோடு மாவட்டம் இருக்கிறது. எந்த வியாபாரியும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதே இல்லை. ஆனால் சென்னையை பொருத்தவரை பத்து ரூபாய் நாணயம் எந்தவித இடையூறும் இல்லாமல் புழக்கத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.