Spread the love

நெல்லை அக், 12

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 101 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்போன் தொலைத்தவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,

இந்த ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பிலான 486 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் நீண்டகால ரவுடிகள், அதிக வழக்கு உள்ளோர் என ‘ஏ பிளஸ், பிளஸ்’ அந்தஸ்தில் உள்ளவர்கள் என 450 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 177 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 9 மாதங்களில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் நன்னடத்தை பிணையை மீறியதாக இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்த 60-க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகளின் புழக்கம் பெரும்பாலான அளவு குறைந்துள்ளது. இணையதளம் மோசடியில் ஈடுபட்ட 109 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு ரூ. 92 லட்சத்து 99 ஆயிரத்து 177 இழந்தவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *