நெல்லை அக், 10
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டு குடிநீர் இணைப்பு களில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறிபட்டாலோ, அந்த கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நல்மேய்ப்பர் நகர், குறிஞ்சி மெயின் ரோடு, ரோஜா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் உதவி செயற்பொறி யாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவை சேர்ந்த செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது,
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படு வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கூறினார்.
