வேலூர் செப், 29
திருவலம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பொன்னை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக. செயலாளருமான காந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் மாவட்ட திமுக. செயலாளர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக. செயலாளரும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான அக்ராவரம் முருகன், ஒன்றிய செயலாளர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.