வேலூர் செப், 28
அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட திப்ப சமுத்திரம் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 120 பேருக்கும் வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ், தலைமை நில அளவையர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் குச்சிபாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் நாங்கள் இந்தப்பகுதியில் 75 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம், எங்களுக்குவீட்டு பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வட்டாட்சியர் நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வரும் 60 பேருக்கு வருவாய் துறை சார்பாகவும், மீதமுள்ள 60 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.