நெல்லை செப், 27
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 28வது பாட்டில் டவுன் தெப்பக்குளம் பகுதி உள்ளது. இந்த தெப்பக்குளத்தை ஒட்டி அமைந்துள்ள மாணிக்கவாசகர் தெருவில் கழிவு நீர் ஓடையில் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து விடும் அபாயம் இருந்தது. மேலும் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுத்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் கழிவு நீர் ஓடையை சீரமைத்து தேங்கி உள்ள சாக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரசேகர், மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் அங்கு சென்று கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மண் மேடுகளும் அகற்றப்பட்டு கழிவுநீர் செல்ல வழி வகுக்கப்பட்டது. சுமார் ஒரு வருட காலமாக அந்த தெருவில் மழை பெய்து விட்டால் இதே நிலைதான் நீடிக்கிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் வயதானவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கழிவுநீர் ஓடை அடைப்பு சரி செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு வருட கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக கூறி அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.