நெல்லை செப், 28
நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சில முக்கிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
அதாவது தற்போது நெல்லை இருந்து பாபநாசம் நெடுஞ்சாலை பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு இப்பகுதியை சேர்ந்தவர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும்,
மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பான தீர்த்தம் அருவிக்கு சோலார் படகு மூலம் சுற்றுலா பயணிகள் சுற்றலா செல்ல வழிவகுக்க வேண்டும், இதனையடுத்து பாபநாசம் அருகே உள்ள கோட்டைவிளைப்பட்டில் கரடி கடித்து காயம் அடைந்த பெண்ணுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், அம்பையில் புதிய பாலம் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் சுற்றி செல்வதால் பேருந்து கட்டணம் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்பையின் முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
முன்னதாக அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் வீடு வீடாக நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி படித்துவரும் சுமார் 10 ஏழை மாணவ – மாணவிகளின் படிப்பு செலவிற்காக ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊக்க தொகை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற சிறுவனுக்கு இன்னும் 10 நாட்களில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருக்கும் நிலையில் மாணவனின் முழு மருத்துவ செலவையும் ஏற்பதாக சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.