Spread the love

நெல்லை செப், 27

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள் முற்றிலுமாக வறண்டு மண் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை காப்பாற்றுவதற்காக பயிரிட்டுள்ள பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது.நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்பட 6 அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசத்தில் இன்று காலை நிலவரப்படி 92.90 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 336 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்
தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ராமநதி, கடனா, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த அணைகளை நம்பி உள்ள விவசாய நிலங்களில் தற்போது பெரும்பாலான இடங்களில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. எனினும் நீர்மட்டம் குறைந்து வருவதால் குளங்கள் வறண்டு வருகின்றன. குண்டாறு அணை நீர்மட்டம் 18 அடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து அணைகளில் நீர் இருப்பு குறைவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *