கன்னியாகுமரி செப், 26
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
ராணுவ கல்லூரி டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2023 பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வானது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத் தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
மேலும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும். விண்ணப்பிக்கலாம் இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்போடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை- கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட்-248 003 என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணைய தளமான www.rimc.gov.in மூலமாகபெற்றுக் கொள்ளலாம்.