நெல்லை செப், 18
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ம்தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என 2 பிரிவாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகமது ஷாபி கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த ஓட்டத்தை மாநகர துணை காவல் ஆணையர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஓட்டம் பாளை பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7,500-ம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. முடிவில் ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் முகமது அரபாத் நன்றி கூறினார்.
