நீலகிரி செப், 18
கூடலூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனிடையே கேரளாவில் வெறி நாய்கள் கடி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதி கேரள மாநில எல்லையில் இருப்பதால். தெரு நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தனியார் அமைப்பு சார்பில், கூடலூர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
மேலும் 2 கால்நடை மருத்துவர்கள் தலைமையில் 7 பேர் 2 குழுக்களாக பிரிந்து தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வலை மூலம் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பிடிக்க வேண்டும் நாள் ஒன்றுக்கு 100 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளனர்.
முதற்கட்டமாக கூடலூர் பகுதி முழுவதும் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போட்ட பிறகு, படிப்படியாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.