கிருஷ்ணகிரி செப், 17
கடந்த ஒரு மாத காலமாக சூளகிரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சூளகிரி அருகே சின்னார், தொட்டி, மைதாண்டபள்ளி, செம்பரசனபள்ளி, கட்டிகானபள்ளி, மாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தக்காளி செடியிலேயே அழுகி அழிந்து வருகின்றன. அதிக மழையின் காரணமாக நோய்த்தொற்று மற்றும் ஈரப்பதம் அதிகமாக ஏற்பட்டிருப்பதால் தக்காளிகள் பெருமளவில் அழுகி, விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாயிகள் கவலை தற்போது தக்காளிக்கு ஓரளவு கூடுதல் விலை கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில் தோட்டங்களில் அழுகிய தக்காளிகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அப்படியே பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று அங்கு போடும்போது, பாதி அழுகிய நிலையில் இருப்பதால், தக்காளியை சரியான விலைக்கு விற்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மனக்குமுறலுடன் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்தும், அதை விற்க முடியவில்லையே என்ற வேதனை அடைந்த விவசாயிகள் சூளகிரி பகுதியில் விற்பனை ஆகாத தக்காளிகளை குவியல், குவியலாக கொண்டு சென்று தீர்த்தம் சாலையில் உள்ள ஆறுகளில் கொட்டி செல்கின்றனர்.
மேலும் ஆற்றங்கரையில் கொட்டிக்கிடக்கும் இந்த தக்காளிகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வேதனையுடன் பார்த்து செல்வதை காணமுடிகிறது. பார்க்கும் பொதுமக்களுக்கே கண்ணீரை வரவழைக்கும் இந்த நிகழ்வு அதை விவசாயம் செய்து அறுவடைக்கு பிறகு அதை விற்க முடியாமல் ஆற்றில் கொட்டிய விவசாயிகளின் நிலை மிகவும் வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் கவலையுடன் கூறினர்.