Spread the love

நெல்லை செப், 14

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதாவது அந்த வழக்கு குறித்த விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலருக்கு உடன் இருந்து உதவ குழந்தைகள் நலக் குழுமத்திடம் இருந்து ஒரு நபரை வேண்டி பெறுதல், அரசின் இடைக்கால நிவாரணம் பெறுதல், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல காவல் தலைமை அதிகாரி அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.அதன்படி, புகார்தாரர்களின் மொபைல் போனுக்கு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலம் விசாரணை விபரத்தை அனுப்பும் முறையை நாட்டில் முதல் முறையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், தென்மண்டல காவல் தலைமை அதிகாரி உத்தரவினை நெல்லை மாவட்டத்திலும் நடைமுறைபடுத்தி உள்ளோம். இதற்காக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னபூரணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்டப்டு உள்ளது. இந்த குழுவில் 4 பேர் செயல்படுவார்கள்.
அவர்கள் ஹலோ போலீஸ் வாட்ஸ் அப் எண் மூலமாக போக்சோ வழக்கின் விபரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிப்பார்கள். மேலும் அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து உரிய விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலம் போக்சோ குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *