Spread the love

நெல்லை செப், 10

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

மேலும் காலை, மதியம் என 2 கட்டங்களாக நடந்த இந்த தேர்வுக்காக 2,100 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்காக 5 அமைவிடங்களில் 7 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று தேர்வு நடைபெற்றது.
மாநகர பகுதியில் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, திருவனந்தபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி, பழைய பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூரில் உள்ள 2 கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் இன்று காலை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மொத்தம் 2,078 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலையில் நடந்த தேர்வில் 1,061 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 1,017 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதன்படி இன்றைய காலை தேர்வை 51.05 சதவீதம் பேர் எழுதி உள்ளனர். இந்த தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 2 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது மேற்பார்வையில் 8 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது.

மேலும் இந்த தேர்வு மையங்களில் காவல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மையத்திலும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனையொட்டி டவுன் சாப்டர் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, டி.என்.பி.எஸ்.சி. அலுவலர் நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *