நெல்லை செப், 8
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.
இதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து கார் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் நெல்லை வந்தடைந்தார்.
வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய அவரை திமுக. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னதாக அவருக்கு குமரி- நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு, நாங்குநேரி யூனியன் அலுவலகம், பொன்னாக்குடி விலக்கு ஆகிய 3 இடங்களில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் இன்று காலை 9.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் இருந்து விழா நடைபெறும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்திற்கு புறப்பட்டார். அவருக்கு வண்ணார்பேட்டையில் இருந்து விழா மைதானம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் மத்திய மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடை வரையிலும் கொடி தோரணங்கள், 1000 இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு செண்டை மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என சுமார் 25 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் சாலையின் இருபுறங்களிலும் பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். காலை 10 மணி அளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் விழா மேடைக்கு சென்றார். அங்கு நடந்த அரசு விழாவில் ரூ.330 கோடி மதிப்பீட்டில் 30 ஆயிரத்து 658 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பாளை மேடை காவல் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானம், மனக்காவலம் பிள்ளை சாலையில் உள்ள பல்நோக்கு அரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டங்களாக திகழ்கின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என அவர் பேசினார்.