Spread the love

நெல்லை ஆக, 29

நெல்லை மாநகர பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை விரிவாக்க பணிகள், கழிவு நீரோடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் பஸ்கள் சந்திப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் சந்திப்பில் இருந்து டவுனுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டும் ஸ்ரீபுரம் வழியாக செல்கிறது.

தென்காசி, பேட்டை, முக்கூடல் வழித்தட பஸ்கள் தச்சநல்லூர், கண்டியபேரி வழியாகவும், டவுனில் இருந்து சந்திப்பு செல்லும் கார், மோட்டார் சைக்கிள்கள், லாரிகள் உள்ளிட்டவை நயினார்குளம் ரோடு, தச்சநல்லூர் வழியாக வருகின்றன.
இதனால் டவுன் பகுதியில் உள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளும் தென்காசி செல்ல வேண்டுமானால் பழையபேட்டை கண்டியபேரி வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அறியாததால் இன்று காலை ராணி அண்ணா கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவிகள் பொருட்காட்சி திடல் பகுதியில் மணி கணக்கில் காத்து நின்றனர்.

அதன்பின்னரே விபரம் தெரியவந்ததால் அவர்கள் வழுக்கோடை வரை டவுன் பஸ்களில் சென்று அங்கிருந்து தென்காசி பேருந்துகளில் ஏறி சென்றனர்.
பெரும்பாலானோர் வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்து அங்கிருந்து தென்காசி வழித்தட பஸ்களில் ஏறி சென்றனர். இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அங்கும் இங்குமாக பரிதவித்தனர்.

மேலும் போக்குவரத்து மாற்றத்தால் மாநகரப்பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக எஸ்.என். ஹைரோடு, தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில், டவுன் தொண்டர் சன்னதி, வழுக்கோடை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கிறது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து வாகன நெருக்கடியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *