நெல்லை ஆக, 29
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரத்தில் கடந்த 22 ம் தேதி வீட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்மநபர் பறித்து சென்றார்.
இதுதொடர்பாக வி.கே.புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து வி.கே.புரம் காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் செயினை பறித்துசென்ற மர்மநபரை தேடி வந்தனர். தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வீரவநல்லுரைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் நடேஷ் குமார்(வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பிசியோதெரபி மருத்துவராக இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து வி.கே.புரம் காவல் துறையினர் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொரோனா காலத்தில் இவரது மருத்துவ தொழில் நலிவடைந்ததாகவும், அது முதல் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தனர்.