Spread the love

மதுரை ஏப்ரல், 11

தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா தேவி உள்ளிட்டவர்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். மதுரை லோக்சபா தொகுதியை வெல்வது யார்? என்பது தொடர்பாக இவர்கள் 4 பேர் இடையே போட்டி நிலவுகிறது. இதுதவிர சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தான் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர். இந்த வேளையில் தனக்கே உரித்தான பாணியில் பேசி பொதுமக்களை கலகலப்பாக்கினார். செல்லூர் ராஜூ பேசுகையில், ‛‛நாம எல்லாம் யாரு.. மதுரைக்காரங்க.. நீங்க மதுரைக்காரி.. வீரம் விளைஞ்சவங்க நாம..விவேகம் நிறைஞ்சவங்க.. நமக்கு உதவி செய்தால் உயிரையே கொடுப்போம்.

நம்மை ஏமாற்றினால் வச்சி செய்வோம்.. எப்படி செய்வோம்? எங்க சொல்லுங்க” எனக் கேட்க பெண்கள் அனைவரும் ‛வச்சி செய்வோம்’ என உற்சாகமாக கூறினார்கள். மேலும் தொடர்ந்து செல்லூர் ராஜூ பேசினார். அவர் பேசுகையில், ‛‛இந்த தேர்தலில் நாம வச்சி செய்யணும். நம்ம டாக்டரை (அதிமுக வேட்பாளர் சரவணன்) வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இந்த சமயத்தில் பிரசார வாகனத்தில் நின்ற அதிமுக வேட்பாளர் சரவணன் சிரித்தபடி கைக்கூப்பி நின்றார். இதனை கவனித்த செல்லூர் ராஜூ, ‛‛உங்களை பார்த்தவுடன் சிரிக்கிறார். அவரது சிரிப்பே தனி அழகையா. இவரை பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். பால்வடியும் முகம். இவருக்கு நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.

பக்கத்தில் போய் காய்கறி வாங்க சென்றாலும் சரி, பலசரக்கு கடைக்கு செல்லும் போதும் சரி யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும். மற்றவர்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும் போடக்கூடாது. வீட்டுக்காரர்கிட்டயும் சொல்லனும்.. புள்ளைங்ககிட்டேயும் சொல்லனும்.. இல்லைனா சோறே போடமாட்டேன்னு சொல்லனும்” என கலகலப்பாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *