நெல்லை ஆகஸ்ட், 22
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக குழாய் இணைப்பு மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்காக குடியிருப்பின் மையப்பகுதியில் அடிபம்பு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன் அடிப்பம்பு பழுதாகிய நிலையில் தொடர்ந்து அப்பகுதியினர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடிநீரும் சரிவர விநியோகம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் அந்த அடிப்பம்பிற்கு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திமுகவினர் மற்றும் நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் வாய் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.