Spread the love

நெல்லை ஆகஸ்ட், 21

சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் கொண்டாட்டமாக மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மஹாலில் 10 நாட்கள் கண்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் சுதந்திர போராட்டத்தில் இதுவரை அறியப்படாத ஆளுமைகளை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் 130 பேரின் புகைப்படம், அவர்கள் குறித்த வரலாற்று குறிப்புகள் இடம்பெறுகின்றன.
இதில் இந்தப் பகுதியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒண்டிவீரன், வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்த செய்திகளும் இடம்பெறுகிறது.

இவ்விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 14ம்தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஸ்வராஜ் என்ற தொடர் ஒலிபரப்பப்படுகிறது. அதன் பிராந்திய மொழி ஒலிபரப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது,நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட அதிகமானோர் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மிகப்பெருமை உடையது.

2047ல் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் என்ற திட்டம் 100-வது சுதந்திர தினத்தில் நிறைவேற வேண்டும். 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய தொடர் தூர்தர்சனில் 9 பிராந்திய மொழிகளில் 75 வாரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பபட உள்ளது. 75 சுதந்திர போராட்ட வீரர்களில் 3 தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், பூலித்தேவன் ஆகியோரது வரலாறு இடம்பெறுகிறது. இளைஞர் சமுதாயம் வேலை தேடும் சமுதாயமாக இல்லாமல் வேலை கொடுக்கும் சமுதாயமாக இருக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் கனவு. 25 ஆண்டுகளில் வல்லரசு இந்தியாவாக, முன்னேறிய நாடாக மாறும். சிறப்பான மனித வளத்தை இந்தியா கொண்டுள்ளது. மனிதகுல மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வ.உ.சியின் பேத்தி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பாளர் ஆறுமுக செல்வியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் சட்ட மன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன், தகவல் ஒலிபரப்பு அமைச்சக தென்பிராந்திய தலைமை இயக்குனர் வெங்கடேஷ்வர், தூர்தர்ஷன் நிகழ்ச்சி பிரிவு தலைவர் பாட்ஷா, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *