நெல்லை ஆகஸ்ட், 19
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான அனவன்குடியிருப்பு, பொதிகையடி, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அடித்து கொல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன.
இந்த நிலையில் அனவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி லிட்டில் மேரி தனது வீட்டில் உள்ள 15 ஆடுகளை அருகில் இருந்த புல்வெளிப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார்.
அப்போது மலை அடிவாரப்பகுதி என்பதால் அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று மேய்ந்து கொண்டிருந்த பெண் ஆட்டினை கடித்து குதறியது. சம்பவத்தை நேரில் பார்த்த மேரி தான் வைத்திருந்த கம்பால் சிறுத்தை தாக்க முயன்றார். அப்போது சிறுத்தை ஆட்டை ரத்த காயங்களுடன் கிழே போட்டுவிட்டு சென்றது, தொடர்ந்து அந்த ஆடும் பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அனவன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. வனத்துறையினர் சரியான முறையில் மின்சார வேலிகளை அமைத்து கொடுத்தால் இந்த சிறுத்தைகளானது கிராமத்திற்குள் இறங்கி வராது எனவே மின்சார வேலிகள் அமைத்து தரவேண்டும் என்பதே இப்பகுதி கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. என்றனர்.