நெல்லை ஆகஸ்ட், 18
நெல்லை மாவட்டம், அணைந்த நாடார்பட்டியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து இந்த கல்குவரி மூடப்பட்டது. ஏற்கனவே இந்த கல்குவாரியில் அரசு விதியை மீறி வெடி மருந்து வெடித்தாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கல்குவாரிகளில் வெடி வெடிப்பதல் அருகே உள்ள அனைந்த நாடார்ப்பட்டி வீடுகளின் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டு இடியும் அபாய நிலையில் உள்ளது.இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் கல்குவாரி திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அணைந்தநாடார்பட்டி, கலிதீர்த்தான் பட்டி, பனையன்குறிச்சி இடைகால், நாலாங்கட்டளை, ஆழ்வான் துலுக்கப்பட்டி ஆகிய ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அணைந்தநாடார் பட்டி கிராமத்தில் திரண்டு ஆலங்குளம் அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள் என நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அம்பை வட்டாட்சியர் ஆனந்தபிரகாஷ், அம்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், அம்பை ஆய்வாளர் சந்திரமோகன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் வரும் 26 ம் தேதி துணை ஆட்சியர் ரிஷப் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யபடும் என தெரிவித்ததை அடுத்து 1 மணிநேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.