சென்னை ஆக, 1
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் – ரெட்டேரியில் ரூ.21.39 கோடி செலவில் 1 கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, கொளத்தூர் ஏரியில் ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அக்கல்லூரியில் பயிலும் 685 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் ரூ.10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கி உரையாற்றினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.