Spread the love

நெல்லை ஆகஸ்ட், 18

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றான அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற 19 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது கிருஷ்ண பகவானுக்கு பல்வேறு விதமான பலகாரங்கள், நிவேதனம் செய்ய மண்பானைகளில் அமுது படைக்கப்படுவது வழக்கம்.

மேலும் ஆண்டுதோறும் 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான பானைகள் இந்த விழாவுக்காக தயார் செய்யப்பட்டு பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு கிருஷ்ண பகவானுக்கு பிடித்த பலகாரங்களான தேன்குழல், அப்பம், அதிரசம், லட்டு, பூந்தி, வெண்ணை உள்ளிட்ட பதார்த்தங்களை படையலிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்கள் அனுமதி இன்றி நடந்து வந்தது. இந்த ஆண்டு விமர்சையாக திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகளை தயார் செய்து வருகின்றனர்.

இங்கு சிறிய அளவிலான 5 ஆயிரம் கலசங்களும், பெரிய அளவிலான 3 ஆயிரம் பானைகளும் அமுது படைப்பதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 75-வது சுதந்திரதினம் அமுதபெருவிழாவாக கொண்டாடப்படும் சூழலில் பாரதமாதா உருவம் பொறிக்கப்பட்ட பானை புதிதாக இடம் பெற்றுள்ளது.
மேலும் சுவாமிக்கு அமுது படைக்க தயார் செய்யப்படும் பானைகளில் கிருஷ்ணர், சிவன், ராமர், விநாயகர், முருகர், மகாவீரர், பெருமாள், மகாலட்சுமி உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிய முயற்சியாக பானைகளில் சிற்பங்களை வடிக்கும் பணிகளிலும் ஓவியக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பணிக்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற ஓவியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு சுமார் 3 மாதங்களுக்கு மேலாக விரதம் இருந்து ஓவியம் வரையும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் இரவு பகலாக 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உணவு பொருட்கள் வைத்து படையில் இடம் பானைகள் என்பதால் நச்சுத்தன்மை இல்லாத வகையில் வாட்டர் கலர் மூலம் பானைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பானைகளில் கிருஷ்ண ஜெயந்தி அன்று அமுது படைத்து சுவாமிக்கு வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *