திண்டுக்கல் ஆகஸ்ட், 17
பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல் துறையினர்க்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே வெள்ளை விநாயகர் கோவில் அருகே இந்து முன்னணியை சேர்ந்த மேலும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவிராஜ், மூர்த்தி, துணைத் தலைவர் வினோத் ராஜ் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.