நெல்லை ஆகஸ்ட், 16
திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தில் கூடங்குளம் அணு உலை ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய் நகரத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய கொடியேற்றிய பின்னர் அணு உலை வளாக இயக்குநர் பிரேம்குமார் உரையாற்றுகையில், கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் 62 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதுபோல் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகளில் பெரிய சவாலை சந்தித்து வருகிறோம். இப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்கும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த நிதியாண்டில் மட்டும் 1, 2வது அணு உலைகள் வாயிலாக 14,500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.6,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்திய அணுசக்தி கழகத்துக்கு ரூ.3,600 கோடியை லாபமாக கூடங்குளம் அணுமின் நிலையம் வழங்கியிருக்கிறது என அவர் கூறினார்.