நெல்லை ஆகஸ்ட், 15
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 75வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமையேற்றுத் தேசியக் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் செய்யது அலி பாதுஷா வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புள்ளியியல்துறைப் பேராசிரியர் செந்தாமரைக்கண்ணன், ஹரி வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் அல்ஹாஜ் முகம்மது நாசர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் கல்லூரி பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான கட்டுரை போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப் பெற்றன. கல்லூரி இளைஞர் நலத் துறையும் இந்தியன் ஓவர்வசீஸ் வங்கி நீதிமன்றக் கிளையும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் சாதனை புரிந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு பணி நிறைவு பெறக் கூடிய கணினி இணைப் பேராசிரியர் அமீர் ஹம்சா, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு அயூப்கான் கணிதவியல் துறைத் தலைவர் ரசிதா பேகம் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர் விடுதியிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.