திண்டுக்கல் ஜன, 28
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25 ம்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 18 ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.