நெல்லை டிச, 15
நவ கைலாயங்களில் சூரியன் ஸ்தலமானது பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு விமரிசையாக நடைபெறும் சித்திரை விசு திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடந்தது. பொதுவாக ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் பாபநாசம் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இதனிடையே சமீபத்தில் ஆய்வுக்கு வந்த இந்துசமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்துக்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பாபநாசம் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் கும்பாபி ஷேகத்திற்கான திருப்பணிகளை உடனடி யாக தொடங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பாலா லய நிகழ்ச்சிகள் நேற்று அதிகாலை கணபதி ஹோமத்து டன் தொடங்கி யது. சோமசுந்தர் பட்டர் தலைமை யில் பங்கேற்ற 15 சிவாச்சாரி யார்கள் ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாட்டை முன்னின்று நடத்தினர்.
இதில் இந்து சமய இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கோவில் நிர்வாக அதிகாரி போத்தி செல்வி, உதவி ஆணையாளர் மற்றும் தக்கார் கவிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு 2-ம் யாக கால பூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு பாலாலய வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.