நெல்லை டிச, 11
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று முன்தினம் பாளை தனியார் பள்ளியில் தொடங்கியது. முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ம் நாளான நேற்று 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு குழு நடனம், இசைகருவிகள் இசைத்தல், காய்கறிகளில் கலைபொருட்கள், மணல்சிற்பம், தனிநடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட 59 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கலை இலக்கிய திருவிழா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.