திண்டுக்கல் டிச, 8
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. பனிமூட்டமும், மேகக்கூட்டமும் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலையில் 10 மணிவரை கூட கடும் குளிர் நிலவிவருகிறது.
இந்நிலையில் இந்த சீதோஷனத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும். அதுபோன்ற மலர்கள் தற்போது அதிக அளவில் பூக்க தொடங்கியுள்ளன.
சிலுவை வடிவத்தில் இளஞ்சிவப்பு மற்றும் மெருன் நிறத்தில் இவ்வகை பூக்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை காண்பதற்காகவே பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து அதன் முன்பு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.