புதுக்கோட்டை டிச, 7
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 19 ம்தேதி அன்று ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் விளக்கு பூஜை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று 18 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.