பழனி நவ, 28
பழனி அருகே திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை 7 மணி அளவில் பாய்லர் பிரிவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆயில்களில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஆயில் என்பதால் தீயை அணைக்க இயலவில்லை. உடனடியாக தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஆயிலில் தீப்பற்றி எரியத்தொடங்கியதும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தீ வேகமாக பரவி அருகிலுள்ள பாய்லரிலும் தீப்பிடித்தது. பின்னர் சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.
இதைதொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. இது குறித்து சாமிநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.