காஞ்சிபுரம் நவ, 26
வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து இருந்தது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது. இதன் காரணமாக திருவள்ளூரில் முக்கிய சாலையான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.