காஞ்சிபுரம் நவ, 24
மத்திய, மாநில அரசுகளால் மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் அழிந்து வரும், பயன்தரும் மரங்களில் ஒன்றான பனை மரத்தை வளர்க்கும் விதமாக 1,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில் பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெனின்குமார் பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை துறை அலுவலர் தணிகை வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச் செல்வி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் ஜெயராஜ், சரஸ்வதி, கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பனைவிதைகளை நடவு செய்தனர்.