விருதுநகர் அக், 23
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியை வழங்கினார்கள். மேலும் 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர், வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம்- 35 சதவீதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.