நாகப்பட்டினம் மே, 13
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் கட்சியில் பல பெரிய பொறுப்பு பதவிகளில் இருந்த போதும் கடைசி வரை மக்கள் தொண்டராகவே இருந்தவர். ஏழுமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நான்கு முறை(1989,1996,1998,2019) பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானவர். அவரின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும், தமிழகம் முழுவதும் செங்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.