வேலூர் நவ, 17
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில கட்டுபாட்டு சங்கம் இணைந்து மாநில அளவில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி 20 மாவட்டங்களில் தொடர்ந்து 10 நாட்கள் கிராமம் கிராமமாக வீதி நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உறவுகள் மற்றும் சாரல் கலை குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட கிராமங்களில் எய்ட்ஸ் நோய் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.