ஜோலார்பேட்டை நவ, 5
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வரவேற்றார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் வாசுதேவ ரெட்டி, மாநில அளவிலான பயிர் காப்பீடு திட்ட அலுவலர் உஷா, மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.